திருப்பதி திருக்குடைகளுக்கு திருவள்ளூரில் வரவேற்பு
கடம்பத்துர்: ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், திருப்பதி பிரம்மோத்சவத்திற்காக திருப்பதி கொண்டு செல்லப்படும் திருக்குடைகளுக்கு, திருவள்ளூர் பகுதியில் நேற்று பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோத்சவத்திற்காக, ‘ஹிந்து தர்மார்த்த ஸமிதி’ சார்பில், 22வது ஆண்டு திருக்குடை உத்சவ ஊர்வலம், கடந்த 13ம் தேதி தொடங்கியது.
சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடந்த தொடக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி முன்னிலையில், கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி ஸ்ரீபீமன்னகட்டே மடத்தின் பீடாதிபதி ஸ்ரீரகுவேந்திரா தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சென்னையில் தொடங்கிய 11 திருக்குடைகள் ஊர்வலம், நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தது.
நேற்று காலை 6:30 மணியளவில், திருவள்ளூர் திருமண மண்டபத்திலிருந்து தொடங்கிய திருக்குடை ஊர்வலத்திற்கு, மணவாள நகர், திருவள்ளூர், திருப்பாச்சூர் பகுதிகளில், பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மணவாள நகர் பகுதியில் முக்கிய வீதிகளில் வலம் வந்த திருக்குடைகள், திருவள்ளூர், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம் வழியாக, நேற்று இரவு திருச்சானுாரை சென்றடைந்தது.
அங்கு, பத்மாவதி தாயாருக்கு ஹிந்து தர்மாத்த சமிதி சார்பில், இரண்டு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்களின் வேண்டுதல்களுடன், திருக்குடைகள் இன்று காலை திருப்பதி திருமலையை சென்றடையும்.
அதன்பின், இந்த திருக்குடைகள், பிரமோத்சவத்திற்காக, திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் சமர்ப்பணம் செய்யப்படும் என, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.