சைனிக் பள்ளியில் திறனாய்வு போட்டி பல மாவட்ட பள்ளிகள் பங்கேற்பு
உடுமலை: அமராவதி நகர் சைனிக் பள்ளியில் ‘பிராஜனா’ என்ற தலைப்பில் நடைபெற்ற திறனாய்வு போட்டிகளில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் ‘பிராஜனா’ திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில், ஈரோடு, கோவை, மதுரை, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 25 பள்ளிகளில் இருந்து, 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் வழக்கமான கல்வித் திறன்களுக்கு அப்பால், படைப்பாற்றல், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், புதுமையான சிந்தனை மற்றும் தகவல் தொடர்பு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தன.
புகைப்படம் எடுத்தல், குறும்படத் தயாரிப்பு, ஓவியம், கட்டுரை மற்றும் வினாடி-–வினா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சைனிக் பள்ளி முதல்வரும், இந்திய கடற்படை கேப்டனுமான ராகுல் தியாத் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர் குருமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.