Environment
பாகுபலி யானைக்கு சிகிச்சை
சிறுமுகை:கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில், வால் பகுதியில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த பாகுபலி காட்டு யானைக்கு, களி உருண்டைகளில் மருந்து, மாத்திரைகள் வைத்து வனக்கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிறுமுகை வனச்சரக வனப்பணியாளர்கள், வேடர்காலனி பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகுபலி என்ற காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியதாக தகவல் தெரியவந்தது. உடனே வனப்பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாகுபலி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . அப்போது அதன் இடது பின்புறத்தில் வால் பகுதியில், காயம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் மற்றும் அரசு வன கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், யானையை கண்காணித்த போது, வச்சினம்பாளையம் பகுதியில் பாகுபலி யானையின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அரசு வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் வனப்பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று யானையின் காயத்தை தணிக்கை செய்ததில், வனப்பகுதியில் பாகுபலி யானை வேறொரு காட்டு யானை உடன் மோதல் ஏற்பட்டு, அதன் தந்தம் பின்புறம் குத்தியதால் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் காயத்திற்கு மருந்துகள் நேரடியாக செலுத்த இயலாததால், களி தயாரித்து அதில் மருந்துகளை கலந்து அதனை உருண்டைகளாக செய்து யானைக்கு வைக்கப்பட்டது. அந்த களி பாகுபலி யானைக்கு தொடர் சிகிச்சை அளித்தனர். இதில் காயம் குணமாக துவங்கி உள்ளது.