கூடுதல் தெருவிளக்கு அமைக்க விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை
வால்பாறை: முடீஸ் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சுரேஷ், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, முடீஸ் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் கூட தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டி யானைகள் நடமாடுவதால், மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முடீஸ் நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் மிக குறைவான எண்ணிக்கையிலேயே தெருவிளக்குகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவதில்லை.
இதனால், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் வழித்தடத்தில் யானைகள் நிற்பதை தெரிவதில்லை. யானை – மனித மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, முடீஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி, கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.