சாலையில் முகாமிட்ட யானைகள் வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
வால்பாறை: வால்பாறையில் பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக மாறியதால், யானைகள் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, குரங்குமுடி, ஆனைமுடி, முடீஸ், கருமலை பாலாஜிகோவில், அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் அங்குள்ள தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. முடீஸ் மற்றும் சுற்றுபகுதியில் யானைகள் பகல் நேரங்களில் சாலையோரம் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முடீஸ் பகுதியில் நான்கு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் முகாமிடுகின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். யானைகளை தொந்தரவு செய்யவோ, அருகில் செல்லவோ கூடாது,’ என்றனர்.