கரூர் சாலை சேதத்தை தவிர்க்க மழைநீர் வடிகால் வசதி
காஞ்சிபுரம்:கரூர் சாலை சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏரிக்கரையோரம் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கரூர் கிராமத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. பருவ மழை காலங்களில், கரூர் ஏரி நிரம்பினால், அதே கிராமத்தைச் சுற்றியுள்ள 450 ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும்.
வட கிழக்கு பருவ மழையின் போது, கரூர் ஏரி நிரம்பினால், முத்தியால்பேட்டையில் இருந்து கரூர் கிராமம் வழியாக ராஜகுளம் செல்லும் சாலையில், தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, 24.65 லட்சம் ரூபாய் செலவில் கரூர் ஊராட்சி நிர்வாகம், அதே கிராம ஏரிக்கரை ஒட்டி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதேபோல, ஏரிக்கரை முழுதுமாக, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுத்தால், சாலையோரம் ஏரி நீர் கசிவு ஏற்பட்டாலும் சிறுபாலங்களின் வழியாக, தண்ணீர் வெளியேறும். மேலும், சாலை சேதம் ஏற்படாது என, பல தரப்பினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.