Health
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் சாலை, திருவள்ளுவர் சாலைகளில், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக கழிவுநீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை, 24வது வார்டுக்கு உட்பட்ட வி.என்.பெருமாள் சாலைகள் வழியாக திருக்காலிமேடு, நேதாஜி நகர், கே.எம்.வி., நகர், சி.வி.ராஜகோபால் தெரு, சி.எஸ்.செட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலைகளில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இரு நாட்களாக கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பெருமாள் சாலை, திருவள்ளூவர் சாலைகளில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.