Sport
ஒரே இன்னிங்ஸ்... இரண்டு உலக சாதனைகள் - வரலாறு படைத்த Smriti Mandhana!
Smriti Mandhana breaks Mithali Raj’s record, creates new history in Women’s cricket

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையான 10,868 ரன்களைக் கடந்து, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 124 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற இருபெரும் சாதனைகளை அவர் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரமிக்க வைக்கும் ரன்கள் மற்றும் சதங்கள்
ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய மந்தனா, வெறும் 64 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 124 ரன்கள் விளாசினார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் 18-வது சதமாகும்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் மற்றும் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோர் தலா 17 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தனர். அந்தச் சாதனையை இப்போது மந்தனா முறியடித்துள்ளார். மேலும், இந்த இன்னிங்ஸ் மூலம் அவரது ஒட்டுமொத்த சர்வதேச ரன்கள் எண்ணிக்கை 10,880 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையான 10,868 ரன்களைக் கடந்து, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மந்தனாவின் இந்த 124 ரன்கள் இன்னிங்ஸ், மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். மேலும், மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையும் மந்தனாவைச் சார்ந்துள்ளது.
மந்தனாவின் பிரம்மாண்டமான ஆட்டத்திற்குப் பின், 194 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி இந்தியப் பந்துவீச்சுக் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 56 ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், மகளிர் டி20 ஆசியக் கோப்பையின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற முதல் அணியாகவும் உருவெடுத்துள்ளது.
