Sport
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசை… ரன் குவிப்பால் 5 ஆவது இடத்தை தக்க வைத்த ஸ்மிருதி மந்தனா..

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலிலும் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன், ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார். தற்போது அவர் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்த இன்னிங்ஸின் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவப் போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்கள் (10,880 ரன்கள்) குவித்த வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை மந்தனா படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜின் (10,868 ரன்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் இது அவரது 18-வது சதமாகும். இதன் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலிலும் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவும் ஐசிசி டி20 தரவரிசையில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ள அவர், ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் ஏஷா ஓஜா பேட்டர்களுக்கான தரவரிசையில் 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
