Politics
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்த, 384 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. அவை, மாவட்ட ஸ்ட்ராங் ரூமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, தாராபுரத்தில் தற்காலிக ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை மனுதாக்கல் நிறைவடைகிறது. அ.தி.மு.க., – தி.மு.க. – த.வெ.க., – நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன. வரும் அக். 6ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதியில், 186 அமைவிடங்களில், மொத்தம் 320 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, தேர்தல் பார்வையாளர் அம்கோத்து ஸ்ரீ ரங்கநாயக் தலைமை வகித்தனர். ஓட்டுச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கையில், 20 சதவீதம் கூடுதலாக கன்ட்ரோல் மற்றும் பேலட் யூனிட், 30 சதவீதம் கூடுதலாக ‘விவி’ பேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஓட்டுப்பதிவு பயன்பாட்டுக்காக, 362 பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 22 என, மொத்தம் 384 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை சரிபார்க்கும், 416 ‘விவி பேட்’ ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 22 இயந்திரங்கள், பயிற்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாராபுரத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரின் கட்டுப்பாட்டில், தாராபுரம் அரசு கலை கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு ‘சிசிடிவி’ கேமரா, போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில், மண்டல அலுவலர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு எடுத்துச்சென்று, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களிடம் ஒப்படைப்பர். தேர்தல் நாளான, அக். 6ம் தேதி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், முதலில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சரிபார்க்கப்பட்டபின், ஓட்டுப்பதிவு நடைபெறும்.