Politics
முதல்வரின் நண்பர்கள் கட்டுப்பாட்டில் அரசு நடத்தும் கனிம வளங்கள் உள்ளன: ஆதாரங்களை வெளியிடுவதாக உதயநிதி அறிவிப்பு

சென்னை: ''சர்க்காரியா கமிஷன் குறித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, சட்டசபையில் முதல்வர் வாந்தி எடுத்துள்ளார்,'' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபை வளாகத்தில், உதயநிதி அளித்த பேட்டி:
காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவராக நான் பேசியபோது, முதல்வரிடம் நேரடியாக, 15 கேள்விகளை எழுப்பினேன். ஆனால், எவ்வித ஆதாரமும் இல்லாமல், தி.மு.க., மீது பொய் குற்றச்சாட்டுகளை முதல்வர் வைத்தார்.
கட்சி கூட்டங்களில், எங்கள் உறுப்பினர்கள், அரசு மீது வைத்த விமர்சனங்களை, அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்தார். அதற்கு பதில் அளிக்க, நாங்கள் அனுமதி கேட்டதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை.
முதலில் சம்மதித்த சபாநாயகர், பின்னர் மறுத்து விட்டார். முதல்வர், அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளின் அழுத்தமா என தெரியவில்லை. எனவே, முதல்வரின் பேச்சை முழுதும் கேட்டுவிட்டு, எங்களின் எதிர்பை தெரிவிக்க, வெளிநடப்பு செய்தோம்.
நாங்கள் வைத்த ஒரு கேள்விக்கு கூட, முதல்வர் பதில் சொல்லவில்லை. கேள்விகளுக்கு, பதில் தயார் செய்து வருவார் என நினைத்தோம். மனப்பாடம் பண்ணி, ஒப்புவித்தல் போட்டியில் பேசுவது போல, சட்டசபையில் தவறான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார். 'பஞ்ச் டயலாக்', நடிப்பு என 'ரீல்சுக்காக' மட்டுமே, முதல்வர் விஜய் பதிலுரை சொல்லி இருக்கிறார்.
த.வெ.க., - எம்.எல்.ஏ.,கள், ஒரு அமைச்சர், மாவட்டச் செயலர்கள் மேல், குற்றச்சாட்டுகள் உள்ளன. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிகிறீர்கள் என கேட்டால், தி.மு.க., ஆட்சியில், வழக்குகள் இருந்தன என, எங்கள் மீது திசை திருப்புகிறார்.
'மிசா' குறித்து பேச, முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது. சர்க்காரியா கமிஷன் குறித்து, முதல்வருக்கு ஏதாவது தெரியுமா; யாரோ எழுதி கொடுத்ததை, மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, வாந்தி எடுத்து உள்ளார்.
கோடநாட்டில் இவருடைய படம் வெளியீட்டிற்காக, காவலாளி வேலை செய்தவர். இவர், அரசியலுக்கு வந்ததும், ஆட்சியை பிடித்ததும், ஒரு விபத்து. அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை சட்டசபையில் படித்தார்.
இந்த அரசின் மீது வெளிப்படையாக குற்றச்சாட்டை வைக்கிறேன். முதல்வரின் நண்பர்கள் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர், அரசு நடத்தும் கனிம வளங்களை,அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதற்கான ஒவ்வோர் ஆதாரங்களையும், வெளியிட உள்ளேன். இவ்வாறு, அவர் பேட்டியளித்தார்.