Politics
"முதல்வரின் நண்பர்களின் கட்டுப்பாட்டில் கனிமவள சுரங்கங்கள் இருக்கிறது" - உதயநிதி பரபரப்பு குற்றச்சாட்டு

"எந்தத் தவறும் நடக்கவில்லை என்று சர்க்காரியா கமிஷனே அறிக்கை கொடுத்திருக்கிறது. முதல்வருக்கு மிசாவை பற்றி சர்க்காரியா கமிஷனை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது" என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி முதலமைச்சரின் நண்பர்களின் கட்டுப்பாட்டில் கனிமவள சுரங்கங்கள் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சட்டமன்ற பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "முதலமைச்சர் பேசி முடித்தவுடன் நாங்கள் பேச அனுமதி கேட்டோம். முதலில் அனுமதி தரப்படும் என்று சபாநாயகர் ஒப்புக்கொண்டார். முதலமைச்சர் பல தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் எனக்கூறி முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டோம். யாருடைய அழுத்தம் காரணமாகவோ அவர் அனுமதி தர மறுத்துவிட்டார். முதலமைச்சரின் அனைத்து பேச்சுகளையும் கேட்ட பின்னர், எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்"என்று தெரிவித்தார்.
"நாங்கள் வைத்த ஒரு கேள்விக்குக்கூட முதல்வர் பதில் சொல்லவில்லை. தயாராக வருவார் என நினைத்தேன்; மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டிபோல பேசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது தவெக ஆட்சி செய்கிறது என்பதை முதல்வர் விஜய் புரிந்துகொள்ள வேண்டும்" என்றவர், "கடந்த வியாழக்கிழமை எப்படி, ‘திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ஓடினாரோ அதே போல் இன்று மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டி போல் சட்டமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லியுள்ளார். நான் முன்பு சொன்னது போல் அதே பஞ்ச் டைலாக், ஆக்ட்டிங் என ரீல்ஸிற்காக மட்டுமே பதிலுரையை சொல்லியிருக்கிறார் என்றும் விமர்சித்தார்.
"நாங்கள் அவர்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் 1970க்கு சென்று விட்டார் முதல்வர். சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? 3 நாட்களாக யாரோ எழுதிக்கொடுத்ததை மனப்பாடம் செய்துவிட்டு வந்து இங்கு வாந்தி எடுத்திருக்கிறார். எந்தத் தவறும் நடக்கவில்லை என்று சர்க்காரியா கமிஷனே அறிக்கை கொடுத்திருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.
"கொடநாட்டில் பட ரிலீஸிற்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதல்வர். இவருக்கு மிசாவைப் பற்றி பேச என்னத் தகுதி இருக்கு? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
"இவர் அரசியலுக்கு வந்தது, ஆட்சியை பிடித்ததே ஒரு விபத்து. இவருக்கு மிசாவை பற்றி சர்க்காரியா கமிஷனை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதில் எந்த ஆதாரமும் இல்லை வெறும் குற்றச்சாட்டுகள் என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அதேபோல ED ரெய்டு கூறியதை பேரவையில் வாசிக்கிறார். அதெல்லாம் குற்றச்சாட்டுகள்தான். இன்னும் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.” என்றவர், "எங்கள் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கும் முதல்வர் மீது வருமான வரி தொடர்பான வழக்கு இருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறையினரின் வழக்குகள் இருக்கிறது. அண்மையில் கட்சியில் இணைந்த விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் இருக்கிறது. பெட்டிபட்டியாக பணத்தை எடுத்துவந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டதாக ஐயூஎம்எல் எம்.எல்.ஏ வெளிப்படையாகவே பேசியிருந்தார்." என்று உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்குகளை சட்டரீதியாக அவர் எதிர்கொள்வார். அதை வைத்து எங்களை மிரட்டமுடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
"முதல் 15 நிமிடங்கள் வரை நாங்கள் காத்திருந்தோம். முதல்வர் பதில் அளிப்பார் என்று, அதன்பிறகு முதல்வர் பதிலுரையில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை, ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, "முதலமைச்சர்களின் நண்பர்கள் மற்றும் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது மச்சான் சுஜய் ரெட்டி, அவரது பிஸ்னஸ் பார்ட்னர் அனில் ரெட்டி ஆகியோர் இணைந்து அரசு நடத்தும் சுரங்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”திமுக ஆட்சியில் 7.5 முதல் 10% வரை லஞ்சம் என ED அறிக்கை...” - பேரவையில் CM விஜய் ஆவேசம்!
பாஜக எதிர்ப்பு குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “பாஜகவில் 'பா' கூட தவெக வாயில் வராது. ஒரு அமைச்சர் பாஜக தலைவர்களை கண்டித்து பேசுகிறார், அதை இன்னொரு அமைச்சர் தடுத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கச் சொல்கிறார். இந்த அளவுக்குதான் வக்கற்ற அரசு, டம்மி CM ஆட்சியில் உள்ளார் என்று விமர்சித்தார்.
