Politics
‘தாயுமானவர்’ திட்டம்... தள்ளாடும் ரேஷன் ஊழியர்கள்!

வாக்குறுதிகள் எங்கே?
65 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நோக்கில் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தி.மு.க அரசால் தொடங்கப்பட்டது ‘தாயுமானவர்’ திட்டம். முதியோரின் சிரமத்தைப் போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள்தான் களத்தில் செயல்படுத்திவருகின்றனர். ஆனால், `திட்டத்தைத் தொடங்கும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?’ என்று இப்போது கேள்வி எழுப்புகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.
பி.ஓ.எஸ் கருவியால் அதிக நேரம் செலவாகிறது!
இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ் குமாரிடம் பேசினோம். “தாயுமானவர் திட்டத்தின்கீழ், 30 ஆயிரம் ரேஷன் கடை ஊழியர்கள், 20 லட்சம் முதிய பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வழங்கிவருகிறோம்.
ஆனால், இந்தப் பணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, கைரேகை அல்லது விழித்திரை பதிவுசெய்வது பல நேரங்களில் முடியவில்லை. இதனால் அவர்களுக்கு ரேஷன் பொருள்களுக்கான மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக ஊழியர்களையே அதிகாரிகள் கண்டிக்கின்றனர். மேலும், ரேஷன் கடையில் பயன்படுத்தப்படும் எடை இயந்திரமும், பில் போடும் பாயின்ட் ஆஃப் சேல் கருவியும் புளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால், எடையில் ஒரு கிராம் கூடுதலாக இருந்தாலும், பில் போட முடியாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் அதிக நேரம் செலவாகிறது.
தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்!
ஒரே நாளில் பல வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதுடன், வீடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் ஒரு நாளைக்கு 20 முதல் 30 வீடுகளுக்கு மட்டுமே பொருள்களை வழங்க முடிகிறது. அதேநேரத்தில், முதல் இரண்டு வாரங்களுக்குள்ளேயே அனைத்து முதியவர்களுக்கும் பொருள்களை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப் படுகிறது. இதற்காக ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்படுவதால், வழக்கமாக ரேஷன் வாங்க வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, `தாயுமானவர்’ திட்டத்துக்காகத் தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்; புளூடூத் முறைக்கு பதிலாக செல்போன் மூலம் ஓ.டி.பி முறையில் விநியோகத்தைப் பதிவு செய்ய வேண்டும்; ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் சிரமங்களைத் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் கறுப்புத்துணி அணிந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார் வேகமாக.
படிக்காசும் கிடைக்கலை... வண்டிச் செலவும் தரலை!
ரேஷன் கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் நம்மிடம், “ `தாயுமானவர்’ திட்டத்தை ஆரம்பிக்கும்போது மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிறு தினங்களில் வீடுகளுக்குச் சென்று பொருள்களை வழங்கலாம் எனவும், தேவைப்பட்டால் மண்டல இணைப் பதிவாளர்கள் ரேஷன் கடைகளில் மக்களின் கூட்டத்தைப் பொறுத்து தேதியை மாற்றிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ரேஷன் கடைகளில் பணியிலிருக்கும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் எனத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். ஆனால், இவற்றில் எதையுமே மேலதிகாரிகள் முறையாக ஊழியர்களுக்குச் செய்து தரவில்லை.
`தாயுமானவர்’ திட்டத்தில் பணிக்குச் செல்லும்போது 200 ரூபாய் படிக்காசு, பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்கு ஆகும் செலவை இரண்டு வருடங்களாகத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். இதன் காரணமாக எங்கள் கைக்காசைப் போட்டுத்தான் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நிலை இருக்கிறது. `தாயுமானவர்’ திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் வசதியானவர்களாகவும், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் திட்டம் தேவையே இல்லை. இது போன்ற பல முறைகேடுகள் இந்தத் திட்டத்தில் இருப்பதைச் சொன்னாலும், நூறு சதவிகித விநியோகம் செய்யப்படவும் வேண்டும் என அதிகாரிகள் எங்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள்” என ஆதங்கப்பட்டார்.
உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனிடம் இது குறித்துப் பேசினோம். “எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போதும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் `தாயுமானவர்’ திட்டத்தில் குறைகள் இருப்பதாக, சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகிறார்கள். த.வெ.க ஆட்சி அமைத்து மூன்று மாதங்களே ஆகியிருப்பதால் `தாயுமானவர்’ திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளையும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய படிக்காசு, வாகனக் கட்டணத்தையும் கொடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறேன்’’ என்றார் உறுதியான குரலில்.
`தாயுமானவர்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்ற பெயரில், ரேஷன் கடை ஊழியர்களே முதியோர் ஆகிவிடுவார்களோ?
