Economy, business and finance
Volkswagen : மேலும் 50 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்... ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முடிவுக்கு என்ன காரணம்?

கடந்த மார்ச் மாதம் 50 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2030-க்குள் கூடுதலாக 50 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், மேலும், 50 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Audi, போர்ஷே, ஸ்கோடா, பென்ட்லி, லாம்பர்கினி உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளைக் கொண்டுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், சீன மின்சார வாகன தயாரிப்பாளர்களுடன் கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது.
மாறிவரும் நுகர்வோர் தேவைகள், வேகமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லாபமும் விற்பனையும் சரிவடைந்து வருகிறது.
உலக அளவில் வாகன சந்தையில் நிலவும் இந்த கடும் போட்டி மற்றும் விற்பனை மந்தநிலையை சமாளிக்க, கடந்த மார்ச் மாதம் 50 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 2030-க்குள் கூடுதலாக 50 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, நடப்பு பத்தாண்டின் இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.
தனது 90 ஆண்டு கால வரலாற்றிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் நடக்கும் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், மேலாண்மைப் பதவிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50,000 பணியிடங்கள் குறைக்கப்படும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, உலகளவில் 6 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
