Health
தட்டம்மை தொற்று பரவல் தீவிரம்:பலி எண்ணிக்கை 1,000 எட்டுகிறது
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் தட்டம்மை நோய் தொற்று மிகத் தீவிரமாக பரவி வருவதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 நெருங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசம் முழுதும் கடுமையான தட்டம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது-. இது கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான நோய் பரவலாக மாறியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.66 லட்சத்தை தாண்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு, இந்நோய் தொற்றை தேசிய உயர் அபாய நெருக்கடியாக வகைப்படுத்தியுள்ளது.
ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை:நைஜீரிய தொழில் அதிபர் பலி
லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த நைஜீரிய தொழில் அதிபர் ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சையில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த நைஜீரியவை பூர்வீமாகக் கொண்ட சமூக வலைதள பிரமுகர் இகோ 'டெய்னி' உபிபிரீபோ, 43. தொழிலதிபரான இவர் தன் விலையுயர்ந்த ஆடம்பர வாழ்க்கை குறித்த சமூக வலைதள பதிவுகளால் பிரபலமானவர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் இவர் ஆணுறுப்பை ஊசி மூலம் பெரிதாக்கும் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் கடந்த மே மாதம் லண்டனில், ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. சிகிச்சையின் போது அவருக்கு வழங்கப்பட்ட அமிலத்தின் அளவு அதிகரிப்பால், இதய தமனியில் அடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமான தளத்தில் தீ:20 பேர் பலியான பரிதாபம்
பீஜிங்: சீனாவில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான கிங்டாவோவில் உள்ள பெய்ஹாய் கப்பல் கட்டும் தளத்தில் வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று பழுது பார்க்கப்பட்டு வந்தது.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த போது அக்கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், 20 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன ஐந்து பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிங்டாவோ பெய்ஹாய் கப்பல் கட்டும் தளம் அந்நாட்டு அரசுக்கு சொந்தமான முக்கிய கப்பல் கட்டும் தளமாகும். இது வர்த்தக கப்பல் கட்டுமானம், கப்பல் பழுது பார்ப்பு மற்றும் கடல்சார் பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.