Economy, business and finance
ரூ.1,500 கோடி மோசடி... ஆவணங்கள் இல்லை... ஆப் முடக்கம்... 30% பணமாவது திரும்புமா?
எஃப்.க்யூ.எல் மோசடியில் ஈடுபட்ட ரிச்சர்ட் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடித்து, சொத்துகளைக் கையகப்படுத்தி ஏலம் விடலாம். | rs 1500 crore money fraud by fql company

‘45 நாள்களில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும்’ என்ற ஆசைவார்த்தைகளை நம்பி, தங்களின் வாழ்நாள் சேமிப்பை ஒப்படைத்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கனவுகளைச் சிதைத்திருக்கிறது எஃப்.க்யூ.எல். மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்ட இந்தத் தனியார் நிதி நிறுவனம், ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்திருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.பணம் போனால் மீண்டும் சம்பாதித்துவிடலாம்... ஆனால், பணத்தை இழந்தவர்களின் மனநிலையும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலமும் என்னவாகும் என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை தேடும் முன்பே, திண்டுக்கல் காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்பவர் எஃப்.க்யூ.எல் நிறுவனத்தில் முதலீடு செய்ததுடன், பலரையும் முதலீடு செய்ய வைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 30 சதவிகிதத்தைக்கூட மீட்பது சவால்தான் என்று அதிரவைக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் மனோஜ், “முதலீட்டாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் விசாரணை விரைவாக முடியும். ஆனால் ஆவணங்கள் இல்லாதது காவல்துறையின் விசாரணைக்குச் சவாலாக இருப்பதுடன், நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, நியோமேக்ஸ் வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துகள் தமிழ்நாட்டிலேயே உள்ளன. மேலும், முதலீட்டுக்கான ஆதாரமாக பாண்டுகள் இருப்பதால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கணக்கிட முடிகிறது. ஆனால் எஃப்.க்யூ.எல் விவகாரத்தில் பணம் கையில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது போன்ற ஆவண ஆதாரங்கள் இல்லாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.
அந்தப் பணமும் தனிப்பட்ட ஆப் மூலம் டாலராக மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் போனில் இருப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. தற்போது அந்த ஆப் முடக்கப்பட்டிருப்பதால், அதன் தகவல்களைப் பார்க்க முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களிடமுள்ள ஒரே ஆதாரம் ஸ்கிரீன் ஷாட் மட்டுமே. அதை நீதிமன்றம் எந்த அளவுக்கு நம்பும் என்பது தெரியாததால், பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எஃப்.க்யூ.எல் மோசடியில் ஈடுபட்ட ரிச்சர்ட் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடித்து, சொத்துகளைக் கையகப்படுத்தி ஏலம் விடலாம். ஆனால், இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் பெயரில் சொத்துகளை வைத்திருக்காமல், பினாமிகளின் பெயரில் வாங்கிக் குவித்திருப்பார்கள். எனவே, அவற்றைக் கண்டறிந்து சொத்துகளை மீட்க முடியுமா என்பது உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், பண மோசடி வழக்குகளில் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதால், அந்தக் காலத்துக்குப் பிறகு பதுக்கிவைத்த சொத்துகளுடன் அவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்தும் நிலையும் ஏற்படலாம்.
இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது ஏஜென்ட்டுகள்தான். தற்போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பெரிய பின்புலம் இல்லாததால், அவர்களுடைய சொத்துகளை முடக்கினாலும் பாதிக்கப் பட்டவர்களின் முழுப் பணத்தையும் திரும்பக் கொடுக்க முடியாது. இத்தனை சிக்கல்கள் உள்ள நிலையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 30 சதவிகிதத்தை மீட்டாலே பெரிய விஷயம்” என்றார்.
இது குறித்து மற்றொரு வழக்கறிஞரான பாஸ்கரிடம் பேசும்போது, “கிரிப்டோகரன்சிக்கு ஆர்.பி.ஐ இன்னும் நம்பகத்தன்மை அளிக்காத நிலையில், அதன் பரிவர்த்தனைகள் வங்கிப் பரிவர்த்தனைகளைப் போல இல்லாததால், பணம் யாரிடம் அல்லது எந்தக் கணக்குக்குச் சென்றது என்பதைக் கண்டறிவதில் விசாரணை அமைப்புகளுக்குச் சிக்கல் ஏற்படலாம்.
நீதிமன்றத்தில் வழக்கை நிரூபிக்க ஆவணங்களும், டிஜிட்டல் ஆதாரங்களும் முக்கியம். வெறும் வாய்மொழி குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கை நிரூபிப்பது கடினம். முறையான பத்திரம், ரசீது அல்லது ஒப்பந்தம் இல்லாமல் செயலி மூலம் மட்டும் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அதற்கான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாப்பது அவசியம். செயலி முடக்கப்பட்டாலோ, அதிலுள்ள தரவுகள் நீக்கப்பட்டாலோ விசாரணையில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்.பி.ஐ விதிகளின்படி, பொதுமக்களிடமிருந்து பெறும் டெபாசிட்டுகளுக்கு 12.5 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வழங்க முடியாது. ஆனால், 100 சதவிகிதம் லாபம் தருவதாகக் கூறியபோதே, இது சட்டவிரோதமானது என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களாகவும், சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறைவானவர்களாகவும் இருந்ததால், அவர்களைக் குறிவைத்து மோசடி நடத்தப்பட்டிருக்கிறது.
பொருளாதாரக் குற்றப்பிரிவில் அதிகாரிகள் குறைவாக இருப்பதுடன், பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் பணியாற்றுவதால் பெரிய அளவிலான வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படலாம். மேலும், சர்வதேசத் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரலாம்” என்றார்.
35 ஆயிரம் பேரின் முதலீடு... மீட்கப்படுமா ரூ.1,500 கோடி?
