கொடைக்கானல் அருவியில் மூழ்கி ஐ.டி., ஊழியர் பலி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஓராவி அருவியில் குளிக்க சென்ற சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பலியானார்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. தேன்நிலவை கொண்டாட தனது மனைவியுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்தார்.
விக்னேஷின் நண்பர் சென்னை தாவங்கரையை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் திருநேசன் 27. இவர் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் தனக்கு நன்றாக தெரியும் என்பதால் அழைத்து சென்று காண்பிப்பதாக விக்னேஷிடம் கூறினார். நேற்று முன்தினம் கொடைக்கானல் வந்த திருநேசன், நேற்று மதியம் விக்னேஷ், அவரது மனைவியை அழைத்து கொண்டு அங்குள்ள ஓராவி அருவிக்கு சென்றார். அனைவரும் அருவியில் குளித்தனர்.
அப்போது திருநேசன் திடீரென தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் உடனடியாக தீயணைப்பு துறை, போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பிறகு திருநேசன் உடல் மீட்கப்பட்டது. கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அருவிகளில் குளிக்க தடை பேத்துப்பாறை பகுதியில் உள்ள ஐந்தருவி, ஓராவி அருவியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறப்பது தொடர்கிறது. இதனால் அந்த அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்பகுதியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் மூலம் பயணிகள் உள்ளுர்வாசிகள் துணையுடன் அத்துமீறி செல்கின்றனர். உயிர்பலி தொடராதிருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.