விலைவாசி உயர்ந்தாலும் விடவில்லை தொழிலை... 22 ஆண்டுகளாக பணியாரம் சுடும் பாட்டி

கொரோனா காலத்திலும் பணியாரம் விற்பனை தொழிலை தொடர்ந்து வந்த நெல்லையை சேர்ந்த மூதாட்டி ஈஸ்வரி பெரிய அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த நிலையிலும் யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மூதாட்டி ஈஸ்வரி. கடந்த 22 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் இனிப்பு பணியாரம் தயாரித்து விற்பனை செய்து வரும் இவரது உழைப்பும் தன்னம்பிக்கையும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
வாழ்வாதாரத்திற்காகவும் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்டவும் தினமும் மாலை நேரத்தில் பணியாரம் சுட்டு விற்பனை செய்து வருகிறார் ஈஸ்வரி. இவர் தனது வியாபாரத்தைத் தொடங்கியபோது ஒரு பணியாரம் 50 காசுக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் 75 காசு, ரூ.1.25, ரூ.1.50 என படிப்படியாக விலை உயர்ந்த நிலையில், தற்போது 4 பணியாரங்கள் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறார். விலை மாற்றம் ஏற்பட்டாலும், பணியாரம் சுடும் தொழிலை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
தனது பணியாரத்தின் முக்கிய சிறப்பு பாரம்பரியமான செய்முறைதான் எனக் கூறும் ஈஸ்வரி, புழுங்கல் அரிசியுடன் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து, மண்டை வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் ஏலக்காய் சேர்த்து பக்குவமாகக் கலந்து பணியாரம் சுடுவதாக தெரிவிக்கிறார். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் பணியாரத்திற்கு தனித்துவமான சுவையும் மணமும் இருப்பதாகவும், அதைச் சுவைத்து பழகிய பழைய வாடிக்கையாளர்கள் இன்றளவும் தேடி வந்து வாங்கிச் செல்வதாகவும் கூறுகிறார்.
வெந்தயமும் வெல்லமும் உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும் என்ற நம்பிக்கை தங்கள் காலத்தில் இருந்ததாகவும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணியாரம் நல்லது எனக் கருதி பலரும் வாங்கிச் சென்றதாகவும் ஈஸ்வரி நினைவுகூர்கிறார். ஒரு காலத்தில் தனது கடையில் பணியாரம் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாகவும் அவர் கூறுகிறார்.
தற்போது தினமும் மாலை 3 மணியளவில் கடையைத் தொடங்கும் ஈஸ்வரி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பணியாரம் விற்பனை செய்து வருகிறார். முன்பு இருந்த அளவுக்கு தற்போது வியாபாரம் இல்லை எனக் கூறும் அவர், இளம் தலைமுறையினர் போண்டா, வடை உள்ளிட்ட கார வகை சிற்றுண்டிகளை அதிகம் விரும்புவதால் பாரம்பரிய பணியாரத்தை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார். இருப்பினும், பல ஆண்டுகளாக தன்னிடம் பணியாரம் வாங்கி வரும் பழைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் கூறுகிறார்.
அரிசி, வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வயது முதிர்வு காரணமாக முன்புபோல் வேலை செய்வது சிரமமாக இருப்பதாக ஈஸ்வரி தெரிவிக்கிறார். சில நேரங்களில் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கடையை நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் வந்தாலும், வீட்டில் சும்மா இருப்பது பிடிக்காது என்றும், தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பணியாரம் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தவரை இந்தத் தொழிலை தொடர்ந்து செய்து வந்ததாகக் கூறும் ஈஸ்வரி, “பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், யாரிடமும் கையேந்தாமல் என்னுடைய உழைப்பிலேயே வாழ்ந்து வருகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. வயது அதிகமாகிவிட்டாலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு குறையவில்லை” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
22 ஆண்டுகளாக சுவை மாறாமல் பணியாரம் சுட்டு விற்பனை செய்து வரும் மூதாட்டி ஈஸ்வரியின் விடாமுயற்சியும், உழைப்பின் மூலம் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
