Economy, business and finance
நொய்டாவில் தொடங்கியது கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சி; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,100 நிறுவனங்கள் பங்கேற்பு

கிரேட்டர் நொய்டா: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியின், எட்டாவது எடிஷன், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள, 'இந்தியா எக்ஸ்போ மார்ட்' மையத்தில், நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 14.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் நடக்கும் கண்காட்சியில், ஐந்து வெளி அரங்கங்கள் மற்றும் 12 உள் அரங்கங்கள் என, 17 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகளவில், 1,100க்கும் அதிகமான நிறுவனங்கள், இதில் பங்கேற்றுள்ளன. கடந்த முறை 51,118 பார்வையாளர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்ட நிலையில், இம்முறை 100க்கும் அதிகமான நாடுகளில் இருந்து, 75,000க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈட்டி எறிதல் போட்டியின், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர், கண்காட்சியின் விளம்பர துாதர்களாக உள்ளனர்.
ஜே.சி.பி., ஸ்விங் ஸ்டெட்டர், கேட்டர் பில்லர், சணி, ஏஸ், ஹச்.டி., ஹூண்டாய், டாடா ஹிட்டாச்சி, கம்மின்ஸ், ஸ்காப்லர், லியூகாங் உள்ளிட்ட 20க்கும் அதிகமான உலகளாவிய நிறுவனங்கள், இதில் பங்கு பெற்றுள்ளன.
இங்கு சாலை கட்டுமானம், சுரங்கம், பொருட்கள் கையாளுதல், பொருட்கள் செயலாக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில், 200க்கும் அதிகமான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மின்சாரத்தில் இயங்கும் சுரங்க லாரிகள், வீல் லோடர்கள், பூம் லிப்ட், போர்க் லிப்ட் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன. அதிகபட்சமாக, சணி நிறுவனம், எட்டு மின்சார இயந்திரங்களை காட்சிப்படுத்தின.
உள் அரங்கில், இயந்திர உதிரிபாகங்கள், இன்ஜின் மற்றும் மின் அமைப்புகள், இயந்திர டயர்கள், இதர தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் தீர்வுகள், விற்பனைக்கு பின் சேவை, நிதி சேவை உட்பட, பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஜெர்மனி, இத்தாலி, சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கென பிரத்யேக அரங்கங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சி, அடுத்த தலைமுறை தானியங்கி தொழில்நுட்பம், நிலையான உட்கட்டமைப்பு தீர்வுகள், சிறந்த எரிபொருள் திறனை மையமாக வைத்து நடக்கிறது.