மழைக்கு முன் சீரமைப்பு, மழைக்குப் பின் புதிய சாலைகள்: சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்..!

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளையும் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
வடகிழக்குப் பருவமழை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சேதமடைந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகரின் 900 தெருக்களைச் சீரமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மிகவும் மோசமான நிலையில் இருந்த 900 தெருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றைச் சீரமைக்க சுமார் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, நகரில் புதிதாக சாலைகள் அமைப்பதற்கான மற்றொரு பெரிய திட்டத்திற்கும் மாநகராட்சி தயாராகி வருகிறது. புதிய சாலைப் பணிகளுக்காக ரூ.300 கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, எந்தெந்த பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 360 கி.மீ. நீளத்துக்கு 500 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான கணக்கெடுப்பின் மூலம் புதிய சாலைகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. தற்போது இதற்கான கள ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழை முடிந்த பின்னர் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலைப் பணிகளுடன் சேர்த்து, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளையும் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழைக்கு முன்னதாக 8,000 மரக்கிளைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 42,000 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணிகளுக்காக 15 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
