Politics
விக்கிரவாண்டி --- சேத்தியாத்தோப்பு சாலை பணிகள் அடுத்தாண்டு நிறைவு ஐகோர்ட்டில் ஆணையம் தகவல்

சென்னை: 'சென்னை --- கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விக்கிரவாண்டி -- சேத்தியாத்தோப்பு இடையிலான பணிகள், 2027ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம் செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம், கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இன்னும் பணிகள் முடிவடையாததால், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என, பா.ம.க., செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், 'சேத்தியாத்தோப்பு -- சோழபுரம் -- தஞ்சாவூர் வரையிலான சாலை பணி முடிவடைந்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.
'விக்கிரவாண்டி -- சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை பணிகள், 2027ம் ஆண்டு, ஜூன் மாதம் முடிவடைந்து விடும்' என, கூறப்பட்டுஇருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே சாலை அமைக்கும் பணிகளை விரிவாக முடிக்குமாறு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.