Sport
முதல்வர் கோப்பை குழு போட்டி

விழுப்புரம்: விழுப்புரத்தில், இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் கல்லுாரி மாணவர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில், கூடைப் பந்து, கபடி, வாலிபால், ஹேண்ட் பால் ஆகிய குழு போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலிருந்தும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, திறனை வெளிப்படுத்தினர்.
இதே போல், விழுப்புரம் பெருந்திட்டவளாக அரசு நீச்சல் குளத்தில், கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடந்தது. இதில், பேக் ஸ்ட்ரோக், பிரண்ட் ஸ்ட்ரோக், பிரீ ஸ்டைல், பட்டர்பிளை நீச்சல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ், கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டு நீச்சல் போட்டியில் அசத்தினர்.
பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கில் பேட்மிண்டன் போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் போட்டிகளும் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தலைமையிலான குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.