Politics
'சீமான் சொல்வதெல்லாம் பொய்; ஒரு எம்பி சீட்டுக்காக கூட்டணி போன தேமுதிக'-கடுமையாக விமர்சித்த வன்னியரசு

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துக்களுக்கும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனங்களுக்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பேட்டியில் மிகக் கடுமையான பதிலடிகளைத் தந்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கூறியதாவது,"சீமான் அவர்கள் பல பொய்களைச் சொல்லி வருகிறார். அதில் இதுவும் ஒரு பொய். அவர் அண்டப்புழுகு, ஆகாசப் புழுகு என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு புழுகுபவர் தான் சீமான் என்பது இந்த உலகத்துக்கே நன்றாகத் தெரியும். நாம் அதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அவர் உண்மையிலேயே இடதுசாரிகளுக்கு (கம்யூனிஸ்ட்டுகளுக்கு) ஆதரவு கொடுப்பதாக இருந்தால், இடதுசாரிகளோடு நாம் நிற்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கும் கடைசி நாளான இன்றே நாம் தமிழர் கட்சியின் வேட்புமனுக்களை அவர் திரும்பப் பெற வேண்டும்.
உண்மையிலேயே தெரிந்துதான் நான் ஆதரவு கொடுத்திருப்பேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சீமான் கூறினார். அப்படி அவர் சொன்ன செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்றால், அவர் இன்றே மனுவைத் திரும்பப் பெற வேண்டும். அப்படி அவர் திரும்பப் பெற்றுக்கொண்டால் அவர் சொன்ன செய்தி உண்மை என்று எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால் அவர் சொன்ன பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று இந்த உலகமே அவரைத் தூற்றும்.
கடந்த காலங்களில் பாஜகவோடு செயல்பட்டவர்கள், கடைசி நேரத்தில் அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று கடைசி வரை இரண்டு பக்கமும் பேரம் பேசியவர்கள் தான் தேமுதிகவினர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த கூட்டணிக்கு போவதா, இந்த கூட்டணிக்கு போவதா என்று பேரம் பேசி, கடைசியில் ஒரே ஒரு ராஜ்யசபாசீட்டுக்காக திமுகவுக்கு வந்தவர்கள் எங்களைப் பார்த்துப் பேசுகிறார்கள்.எங்களுடைய தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் சொன்ன கருத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. நாங்கள் என்ன பின்னணியில் சொன்னோம் என்றால், விசிக நீண்ட காலமாக திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்தின் போது திடீரெனப் புதிதாக ஒரு கட்சி கூட்டணிக்குள் வருகிறது. எங்களுக்குக் கொடுக்கிற சீட்டுகளை விட அந்தப் புதிய கட்சிக்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள். திமுகவோடு ஏற்படுகின்ற அந்த முரண்பாடுகளில் இதுவும் ஒரு முரண்பாடு. திமுகவோடு ஏற்பட்ட கசப்புகளில் இதுவும் ஒன்று.
காங்கிரஸோடு நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பு, காங்கிரஸுக்கும் திமுகவுக்குமான கசப்பு, இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்பட்ட கசப்பு, அதேபோலத் திடீரென வந்த ஒரு கூட்டணி கட்சிக்குக் கூடுதலாக சீட்டுகள் கொடுக்கப்பட்டது என அனைத்தும் திமுக எங்களை எப்படி நடத்தியது என்பது தொடர்பாகச் சொல்லப்பட்ட உண்மைகளே தவிர, அவை தேமுதிக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் கூட இல்லை. என்ன உண்மை நிலவரம் என்பதை எங்களுடைய தலைவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், உள்வாங்கிக் கொள்ளாமல் மரியாதைக்குரிய பிரேமலதா அவர்கள் அப்படிப் பேசியிருப்பது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் பதவிக்காகப் போகிற இயக்கம் அல்ல என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆர்எஸ்எஸ் எதிர்ப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல் களமாடிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மட்டும்தான்.
எங்களைப் போன்று 'ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியா' உருவாக வேண்டும் என்று தேமுதிகவால் சொல்ல முடியாது. ஏனென்றால் தேமுதிகவின் சித்தாந்தமே ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம்தான். ஒரே ஒரு எம்பி சீட்டுக்காகத் தான் தேமுதிக அன்று திமுகவுடன் கூட்டணி வைத்தது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)