Politics
திண்டிவனம் தொகுதிக்கான செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் போடுவதில் ‘சிக்கல்’ தி.மு.க.,நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்
திண்டிவனம்: திண்டிவனம் சட்டசபை தொகுதி தி.மு.க., செயற்குழு கூட்டத்திற்காக இரண்டு அழைப்பிதழ் போட்டதால், கட்சியினர் மத்தியில் ‘திடீர்’ குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,தலைமை சீரமைப்புக்குழு பரிந்துரையின் பேரில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்த செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், திண்டிவனம் சட்டசபை தொகுதியை விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. தற்போது வடக்கு மாவட்டத்தில் செஞ்சி, மயிலம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் மட்டுமே வருகிறது.
இதற்கிடையில் மத்திய மாவட்டத்தில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர் லட்மணனுக்கு விழுப்புரம், வானுார் தொகுதியுடன் கூடுதலாக திண்டிவனம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தி.மு.க., சீரமைப்புக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளை ஆகியவற்றை மறுசீரமைத்து தலைமைக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக இன்று(10 ம் தேதி) பிற்பகல் 3:00 மணியளவில் விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் லட்மணன் தலைமையில் கூட்டம் நடைபெறுவதற்கான அழைப்பிதழ் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைமை பிரதிநிதிகளாக புதுச்சேரி மாநில தி.மு.க.,அமைப்பாளர் ,சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த அழைப்பிதழில் விழுப்புரம், வானுார் மற்றும் பதியதாக சேர்க்கப்பட்ட திண்டிவனம் தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் திடீரென்று திண்டிவனம் தொகுதி செயற்குழு கூட்டம் இன்று(10 ம் தேதி) பிற்பகல் 4:00 மணியளவில், திண்டிவனத்திலுள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மேலிட பிரதிநிதிகளான சிவா, வீரமணி ஆகியோர் கலந்து கொள்வர்கள் என்று அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம், திண்டிவனம் இரண்டு கூட்டத்திற்கும் ஒரு மணி நேரம்தான் வித்தியாசம் உள்ளது. திண்டிவனம் தொகுதி, மாவட்ட செயலாளர் லட்சுமணன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், திண்டிவனம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் எந்த கூட்டத்தில் கலந்து கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் திண்டிவனம் தொகுதி செயற்குழு கூட்டம் தனியாக நடக்க உள்ளதால், ஏற்கனவே விழுப்புரத்தில், வானுார், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளின் செயற்குழு கூட்டத்திற்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழுக்கு பதிலாக புதியதாக விழுப்புரம், வானுார் தொகுதி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்று புதிய அழைப்பிதழ் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நிர்வாகிகள் தரப்பில் கூறும் போது,‘நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளை ஆகியவற்றை மறுசீரமைக்கும் பணிகள் அனைத்தும், ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்(மஸ்தான்) முன்னிலையில், கட்சி தலைமையால் நியமனம் செய்யப்பட்டுள்ள மேலிட பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று கட்சி தலைமை கூறியதால், திண்டிவனம் தொகுதிக்கான செயற்குழு கூட்டம் தனியாக நடத்தப்படுகிறது,’என்றனர்.