Crime, law and justice
அரசு பள்ளிகளில் வகுப்புகள் தடையின்றி நடக்க காணொலி மூலம் கற்பித்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் காணொலி வாயிலாக வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வணிகவியல் பாடப்பிரிவு தொடர்ந்து செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வணிகவியல் பிளஸ் 1 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாறும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நாப்கின் இயந்திரங்களை நிறுவ வேண்டும்.
காலியாக உள்ள காவலர், துாய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்கள் காணொலி வாயிலாக வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கலாம்.
ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் (டெபுடேசன்) நியமிக்கப்பட்டு, வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்த முடிகிறது. இதனால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதில் இடையூறு ஏற்படுகிறது.
வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதை உறுதிசெய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
இதன் மூலம், ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் இருந்து வாரத்தில் சில நாட்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகளை நடத்த இயலும் என்ற நிலை ஏற்பட்டாலும், வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.
காணொலி மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான பிற மாற்று வழிமுறைகளையும் ஆராயலாம். இதை பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலித்து, நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால், அறிவுறுத்தல்களை வழங்கலாம். அதனடிப்படையில் அரசு வழக்கறிஞர் செந்தில் செப்., 17 ல் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.