அரசு பஸ் மோதி மாணவி உயிரிழப்பு: பெற்றோருக்கு ரூ.28 லட்சம் இழப்பீடு
சென்னை: அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில், அவரது பெற்றோருக்கு 28.42 லட்சம் ரூபாயை போக்குவரத்து கழகம் வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் தேவபிரியா, 17. இவர், 2023 டிச., 27ம் தேதி கல்லுாரி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக, திருவண்ணாமலை பேருந்து நிலையம் சென்றார். அப்போது, அங்கு வந்த அரசு பேருந்து, மாணவி மீது மோதியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் வசிக்கும் தேவபிரியாவின் பெற்றோர், 49 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.வடிவேல் முன் விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விபத்து தொடர்பான குற்றவியல் வழக்கில், பேருந்து ஓட்டுநர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அவரது கவனக்குறைவு நிரூபிக்கப்படவில்லை. எனவே, இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு, போக்குவரத்து கழகத்துக்கு இல்லை' என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றவியல் வழக்கில் ஓட்டுநர் விடுதலை செய்யப்பட்டதை மட்டும் வைத்து, இழப்பீடு வழங்க முடியாது என்பது ஏற்புடையது அல்ல. குற்றவியல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு, இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கை கட்டுப்படுத்தாது.
விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் வாயிலாக, ஓட்டுநரின் கவனக்குறைவு தான் விபத்திற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு, 28.41 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, 15 நாட்களுக்குள் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.