Crime, law and justice
வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் எப்போது எதிர்பார்த்து ஏமாறும் மக்கள்

சோழவந்தான்: ''வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றத்தை விரைந்து அமைக்க வேண்டும்'' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு மயானம் அருகே 18 ஆண்டுகளுக்கு முன் உரிமையியல், குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் தாலுகா அலுவலகம் அருகே ரூ. பல கோடி மதிப்பீட்டில் கட்டிய புதிய கட்டடத்தில் தற்போது இயங்குகிறது.
இதில் 3 ஆண்டுகள் தண்டனை வரம்பிலான கிரிமினல் வழக்குகளையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கான சிவில் வழக்குகளையும் மட்டுமே விசாரிக்கும் நிலை உள்ளது. இதர வழக்குகளுக்கு மதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
வழக்கறிஞர் சுரேஷ் கூறியதாவது: முன்பு சொத்து மதிப்பு குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்துள்ளதால் பெரும்பாலான வழக்குகளை இங்கு நடத்த முடியவில்லை. வாகன விபத்து, நிலஅபகரிப்பு, விவாகரத்து வழக்குகளுக்காக மதுரை செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள், வழக்கறிஞர்களுக்கு அலைச்சலுடன் பணம், நேரம் விரயமாகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சார்பு நீதிமன்றத்திற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இட வசதி உள்ளிட்ட அனைத்தும் தயாராக இருந்தும், நாட்களைக் கடத்துகின்றனர். சட்டத்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.