Lifestyle and human interest
பாரம்பரிய முறையில் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணியை நாம் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? ரெசிபி இங்கே

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சுவை மிக்க பிரியாணிகள் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமானது.
அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் முக்கியமான ஒன்று 'பிரியாணி'. முகல் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ஷேஷ்வன் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் ஹைட்ரபாத் பிரியாணி என பிரியாணியில் பல வகைகள் உள்ளன.
அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சுவை மிக்க பிரியாணிகள் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமானது. அந்தவகையில் சுவையான ஆம்பூர் பிரியாணியை நாம் வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...
சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவிய பிறகு அரை மணி நேரம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளுங்கள். அதே போல் சிக்கனை நன்றாக தோலுரித்து சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
தற்போது அடுப்பில் குக்கர் வைத்து சூடானவுடன் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி பின்னர் அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்த்து வதக்கி அதன் பச்சை வாசனை போனவுடன் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு மென்மையாக வதங்கியவுடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கி பிறகு அதில் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அலசி வைத்துள்ள கோழி துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மசாலாக்கள் எல்லாம் நன்றாக கோழியுடன் சேர்ந்து வதங்கும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கர் மூடியை மூடி விசில் போடாமல் மிதமான தீயில் சமைக்கவும்.
தற்போது பாத்திரம் ஒன்றை மற்றொரு அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்ததும் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
அதன் பின்னர் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பு : அரிசி முழுவதுமாக வெந்து இருக்கக் கூடாது.
பத்து நிமிடங்கள் கழித்து குக்கரில் அரிசியை போட்டு மூடி விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து குக்கரிலிருந்து பிரஷர் தானாக அடங்கும் வரை விடவும்.
தற்போது குக்கரை திறந்து பார்த்தால் வீடே மணக்கும் வாசனையுடன் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி பரிமாற தயாராக இருக்கும்.
