மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் நெருக்கடி
சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் கட்டணம் கேட்டு வலியுறுத்தப்படும் நிலையில், அதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை, சிறப்பு கமிட்டி வாயிலாக, தமிழக அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாய் வரை ஒரு மாணவரிடம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.
மேலும், விடுதி, உணவு, பஸ் வசதிக்கு, 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தனியொரு மாணவரிடம் வசூலிக்கின்றனர்.
ஆனால், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை தாண்டி, தனியார் மருத்துவ கல்லுாரிகள் தரப்பில், கணக்கில் வராத வகையில், 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, த.வெ.க., ஆட்சியில், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு, ஐந்து தனியார் மருத்துவ கல்லுாரிகள் மீது குற்றஞ்சாட்டிய நிலையில், நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை.
எனவே, மருத்துவ கல்வி இயக்குநர் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் விசாரணையை தீவிரப்படுத்தவில்லை.
இந்நிலையில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வி கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு பெற்றோருக்கு நெருக்கடி தரப்படுகிறது.
இதுகுறித்து, பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
கடந்த ஆட்சிகளில், கல்வி கட்டணத்துடன், 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, குறுஞ்செய்தி வரும். அதை வைத்து புகார் அளித்தாலும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்தால் கூடுதல் கட்டணம் இருக்காது என நம்பினோம்.
ஆனால், கல்வி கட்டணத்துடன் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதில், கூடுதல் கட்டணம் எவ்வளவு என்று வெளிப்படையாக தெரிவிக்காமல், நேரில் வந்து பாருங்கள் என சொல்கின்றனர்; இதுதான் மாற்றம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.