முறைகேடு செய்த அதிகாரி சஸ்பெண்ட் சரியே! வழிகாட்டுதல்களை பின்பற்ற மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
பெங்களூரு: கடவுள், பக்தர்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியற்காக, அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட உத்தரவை, ரத்து செய்ய கோரிய மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகாவில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவிலில், தகவல் தொழில்நுட்ப நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ராஜேஷ் நாயக். இவர், 2018 ஆக., 23 முதல், 25ம் தேதி வரை பணம் பெற்று, போலி ரசீதுகளை வழங்கியதால், ஹிந்து அறநிலைய துறை, அவரை 'சஸ்பெண்ட்' செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராஜேஷ் நாயக் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி கூறியதாவது:
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது, கடவுளுக்கே எதிராக செய்யப்படும் மோசடியாகும். நம்பிக்கைக்கு உரிய பதவியில் இருக்கும்போது ஊழல் நடந்தால், அவரை பதவியில் இருந்து நீக்குவது பொருத்தமானது. எனவே, ராஜேஷ் நாயக் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேவேளையில், இத்தகைய முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க, அரசு சில வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஹிந்து அறநிலைய றை கோயில்களிலும் பூஜை, சேவை டிக்கெட்டுகள், நன்கொடைகள், உண்டியல், தங்குமிடம் மற்றும் பிற வருமானங்களின் வசூல் மற்றும் செலவினங்களை சரிபார்க்க ஒரு மென்பொருள் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு ரசீதும் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான வரிசை எண் கொண்டிருக்க வேண்டும்.
பக்தர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் ரசீதின் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்த்து கொள்ளும் வகையில், கியூ.ஆர்., குறியீட்டு முறை இருக்க வேண்டும்.
ஒரே வரிசை எண்ணுடன் ரசீதை இரண்டாவது முறை அச்சிட கணினி அமைப்பு அனுமதிக்க கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், ஒரு மூத்த அதிகாரியின் ஒப்புதலுடன் இரண்டாவது முறை அச்சிட அனுமதி வழங்கப்பட வேண்டும்.
யு.பி.ஐ., கியூ.ஆர்., குறியீடு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் பணம் செலுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் பண பரிவர்த்தனையை குறைக்க வேண்டும்.
உண்டியல் பணம் எண்ணும் அறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். பணம் எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், 'பாடி கேமராக்களை' கட்டாயம் அணிய வேண்டும்.
கோவிலின் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் எடைகள், விவரங்கள் மற்றும் உயர்தர புகைப்படங்களை உள்ளடக்கிய பட்டியல் முறை செயல்படுத்த வேண்டும்.
ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். பொது சொத்துக்களையும், பக்தர்களின் காணிக்கைகளையும் பாதுகாக்க அவசியம் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.