லாரி மீது சி.இ.ஓ.ஏ., பள்ளி வேன் மோதல் : வேன் டிரைவர் பலி மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டியில் லாரி மீது சி.இ.ஓ.ஏ., பள்ளி வேன் மோதியதில் சம்பவயிடத்திலேயே வேன் டிரைவர் சிவகங்கை வேலாயுதசுவாமி கோயில் தெரு எத்திராஜ் 65, பலியானார். மாணவர்கள் உட்பட 10 பேர் காயமுற்றனர்.
இம்மாவட்டம் இடையமேலுார் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் இன்று (செப்.,5) நடக்கும் விளையாட்டு விழா பயிற்சிக்காக விடுமுறை நாளான நேற்று அப்பள்ளி மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளி வேன் சென்றது. நேற்று காலை 9:00 மணிக்கு வேன் கோமாளிபட்டி அருகே சென்றபோது மேலுாரில் இருந்து கிராபைட் ஆலை நுழைவு வாயிலுக்கு செல்ல முயன்ற ஒரு லாரி திரும்பியபோது, பள்ளி வேன் அதன் பக்கவாட்டு பகுதியில் மோதியது.
இதில் சம்பவயிடத்திலேயே பள்ளி வேன் டிரைவர் எத்திராஜ் பலியானார். வேனில் பயணித்த மாணவர்கள் நல்லாகுளம் காவியா 17, பாசாங்கரை கவிக்சா 16, சேந்திஉடையநாதபுரம் புவனேஷ் 14, அம்ரீத் 9, கீர்த்தீஷ் 9, ரூபிகா 14, ரிதன்யா 9, முடிகண்டம் சுதர்சன் 10, புதுப்பட்டி பாண்டி 14, வேன் டிரைவர் குமாரபட்டி வேலுச்சாமி 60, ஆகியோர் காயமுற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவர்களை த.வெ.க., எம்.எல்.ஏ., குழந்தைராணி நாச்சியார் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் விடுமுறை நாளில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்ற நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் உறுதி அளித்தார். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.