சிவகங்கை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதியதில் ஓட்டுநர் பலி! 9 மாணவர்கள் காயம்!
சிவகங்கை அருகே ஏற்பட்ட சாலை விபத்து பற்றி..

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது பள்ளி வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த மாணவா்கள் 9 போ் பலத்த காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் பகுதியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி வேன் மாணவா்களை ஏற்றி வருவதற்காக வெள்ளிக்கிழமை காலை மேலூா் சாலையில் சென்றது. கோமாளிபட்டியில் கிராபைட் தொழில் சாலை பிரிவில் திரும்பிய போது, எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற எத்திராஜ் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணம் செய்த காவியா, கனிஷ்கா, புவனேஷ், கீரித்ஷ், பரூபிகா, ரிதன்யா, சுதர்சன், பாண்டி உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் நடத்துநர் வேலுசாமி ஆகியோர் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதே மருத்துமனைக்கு உயிரிழந்த எத்திராஜ் உடலும், கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலறிந்த சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைராணி நாச்சியாா் மருத்துவனைக்கு சென்று மாணவா்களுக்கு ஆறுதல் கூறினாா். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செய்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, பள்ளிக்கு கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவா்களை எதற்காக பள்ளி வாகனத்தில் அழைத்துச் சென்றனா் என்பது குறித்து விளக்கம் கேட்டு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலா் (மெட்ரிக் பள்ளி) பள்ளி நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பினாா். இதற்கு நிா்வாகம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாளில், சிவகங்கையை அடுத்த இடையமேலூரில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்காக மாணவா்களை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்றனா்.
அப்போது, வேன் லாரி மீது மோதியதில் பள்ளி வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், 9 மாணவா்கள் காயமடைந்தனா். விடுமுறை நாள்களில் பள்ளிக்கு மாணவா்களை அழைத்துச் சென்ற பள்ளி நிா்வாகம் மீது மாவட்டக் கல்வி நிா்வாகத்தினா் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
A school van driver died after a lorry collided with the van on the Melur–Sivaganga highway, near a graphite factory close to Idayamelur village in Sivaganga district.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.