Arts, culture, entertainment and media
எட்டு மணி நேரத்திற்கு மின் வெட்டு ஆவடி, திருவொற்றியூர் மக்கள் தவிப்பு

ஆவடி: தனியார் காஸ் குழாய் பதிப்பு பணியால், புதைவட கேபிள் அறுந்ததால், பருத்திப்பட்டு, கோவர்தனகிரி, சின்னம்மன் கோவில் பகுதிகளில், எட்டு மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் திருவொற்றியூரிலும் மின் வெட்டு ஏற்பட்டதால், பகுதிமக்கள் அவதியடைந்தனர்.
ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ‘டோரண்ட்’ காஸ் குழாய் பதிக்கும் பணி, ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது புதைவட மின் கேபிள், அடிக்கடி சேதமடைகிறது.
இந்நிலையில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் மின் கேபிள் சேதமடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு, பருத்திப்பட்டு, கோவர்தனகிரி சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின், தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு, 3:30 மணிக்கு மின்சாரம் சீரானது. மீண்டும் மாலை 5:45 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம், ஏழு மணி நேரம் கழித்தே சீரானது. தொடர் மின் வெட்டால், பருத்திப்பட்டு, கோவர்தனகிரி பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆவடி சின்னம்மன் கோவில் சாலையில் காலை 10:00 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் எட்டு மணி நேரம் கழித்து, மாலை 6:00 மணிக்கே மின் வினியோகம் சீரானது.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், காமராஜர் நகர், கன்னிகாபுரம் சுற்றுவட்டார பகுதியிலும், மாலையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர் மின்வெட்டால் பகுதிமக்கள் துாக்கமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதே பகுதிகளில், நேற்று மதியம் 1:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின், 100க்கும் மேற்பட்டோர், ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜே.பி., எஸ்டேட் அருகே, இரவு 7:30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி போலீசார் அவர்களை சமாதானம் செய்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, இரவு 8:30 மணிக்கு பின், ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகம் செய்யபட்டது. மறியலால் சாலையின் இருபுறமும், 2 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதேபோல், மணலி, ஹரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், சாலைமா நகர், ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நள்ளிரவு 12:00 மணி வரை, மின்தடை சரியாகததால், ஆத்திரமடைந்த மக்கள், மணலி புதிய எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால், காமராஜர் சாலையில் திரண்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். அதிகாலை 1:30 மணிக்கு பின், மின் சேவை சீரானது.