பாலாற்றில் நீர் எடுக்க மாநகராட்சிக்கு அரசு அனுமதி தாகம் தீரும்!மக்களுக்கு இனி தடையின்றி குடிநீர் வினியோகம்

காஞ்சிபுரம்:நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, தமிழக அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மக்களுக்கு பாலாறு குடிநீர் தடையின்றி கிடைக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 32,687 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
மாநகர மக்களுக்கு திருப்பாற்கடல், ஓரிக்கை ஆகிய பாலாறு திட்டங்கள் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் வசிக்கும் தனி நபரின் குடிநீர் தேவை, 135 லிட்டராக உள்ளது. தற்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியால் தினமும், 89 லிட்டர் தண்ணீரே வழங்க முடிகிறது.
ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை காரணமாக, பல இடங்களில் டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் சப்ளை செய்து, மாநகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.
ஒரு சில இடங்களில், குடிநீர் சப்ளையே இல்லை. பெரும்பாலான இடங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கூடுதல் குடிநீர் தேவை கருத்தில் கொண்டு, 'தமிழக கால நிலை தாங்கு திறன் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' மூலமாக, 331.88 கோடி ரூபாய் செலவில் குடிநீர் விரிவாக்க பணிகள், கடந்த ஆண்டு முதல் நடந்து வருகின்றன.
இதில், திருப்பாற்கடல் பகுதியில், மூன்று கிணறுகள் மூலமாக தண்ணீரை உறிஞ்ச நீர்வளத் துறையினர் அனுமதி வழங்காமல் இருந்தனர்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளை, காஞ்சிபுரம் த.வெ.க., - -எம்.எல்.ஏ.,வும், வனத்துறை அமைச்சருமான ரஞ்சித்குமார் சந்தித்து ஒப்புதல் பெற்று கொடுத்துள்ளார்.
இந்த ஒப்புதல் மூலமாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக கால நிலை தாங்கு திறன் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 331.88 கோடி ரூபாய் செலவில், குடிநீர் திட்ட பணிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்திற்கு, தண்ணீர் எடுக்க துறை அனுமதி பெறாமல் இருந்தது. தற்போதைய, வனத்துறை அமைச்சர் உதவியுடன் அனுமதி பெற்றுள்ளோம்.
திருப்பாற்கடல் பகுதியில், மூன்று கிணறுகளின் மூலமாக உறிஞ்சப்படும் தண்ணீரை, 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்படும்.
அங்கிருந்து, சாய் தள அமைப்பு மூலமாக குடிநீரை வேகவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும், 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இந்த சேமிப்பு நிலையத்தில் இருந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் 14 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஏற்கனவே இருக்கும் 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என, 24 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு பாலாறு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.