Politics
தசராவை துவக்கி வைக்க நீதிபதி நாகரத்னாவை தேர்வு செய்ய எம்.எல்.சி., தினேஷ் கோரிக்கை

பெங்களூரு: 'மைசூரு தசரா திருவிழாவை துவக்கி வைக்க, கர்நாடகாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னாவுக்கு, அழைப்பு விடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா வலியுறுத்தினார்.
இது குறித்து, இவர் முதல்வர் சிவகுமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
மைசூரு தசரா என்பது, கர்நாடகாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை, உலகுக்கு அறிமுகம் செய்யும், சர்வதேச உற்சவமாகும். மாநிலத்தின் பெருமையை உயர்த்துகிறது.
இம்முறை மைசூரு தசரா திருவிழாவை துவக்கி வைக்க, கர்நாடகாவை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகாவின், இங்கலகுப்பே கிராமத்தை சேர்ந்த நாகரத்னா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட ராமையாவின் மகளாவார். தந்தைக்கு பின் மகளும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பது, இந்திய நீதித்துறையில் சாதனையாகும்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி, தற்போது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி நாகரத்னா, கர்நாடக நீதி அகாடமி மற்றும் பெங்களூரு மத்தியஸ்த மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
பல்வேறு முக்கிய தீர்ப்புகளை பிறப்பித்தவர். இவரை தசரா திருவிழாவை துவக்கி வைக்க அழைத்தால், பெண்கள் முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள கர்நாடகா, இந்நாட்டுக்கே முன் மாதிரியாக இருக்கும்.
நீதித்துறையில் அவர் ஆற்றிய சேவையை கவுரவித்ததாக இருக்கும். இதை மனதில் கொண்டு, இம்முறை தசரா திருவிழாவை துவக்கி வைக்க, நீதிபதி நாகரத்னாவை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.