உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டி வாய்ப்பு நிதியின்றி தவிக்கும் சென்னை வீராங்கனை அரசிடம் உதவி கோரி காத்திருப்பு
சென்னை: உலக அரங்கில் நாட்டிற்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தும், நிதி நெருக்கடியால் சென்னை ‘ரோலர் ஸ்கேட்டிங்’ வீராங்கனை கோபிகா, 18, பரிதவித்து வருகிறார். சாதிக்கும் முனைப்பில், போட்டி செலவுகளுக்காக தமிழக அரசிடம் நிதி கோரி காத்திருக்கிறார்.
தி.நகரைச் சேர்ந்த செல்வராஜ்; ஜிம் பயிற்சியாளர். இவரது மகள் கோபிகா, 18. சிறு வயது முதலே ரோலர் ஸ்கேட்டிங், ஸ்ட்ரெங்த் லிப்டிங், பவர் லிப்டிங், மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் குவித்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அக்., 29 முதல் செப்., 2 வரை நடந்த உலக ஸ்கேட்டிங் போட்டிக்கான தேர்வு போட்டியில், கோபிகா பங்கேற்றார். கடுமையான போட்டிகளுக்கு இடையே தன் திறமையை நிரூபித்த அவர், தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெற உள்ள உலக ஸ்கேட்டிங் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், போட்டியில் பங்கேற்க தேவையான நிதி இல்லாததால், உலக போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
உலக அளவிலான போட்டியில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், நிதி பற்றாக்குறையால் தடைபடக்கூடாமோ என்ற அச்சமும் உள்ளது. தமிழக அரசின் ‘சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டம்’ வாயிலாக நிதியுதவி பெறுகிறேன். ஆனால், சர்வதேச போட்டிக்கு அது போதுமானதாக இல்லை. எனவே, பயணம் மற்றும் போட்டி செலவுகளுக்காக, அரசு நிதியுதவி வழங்க அரசு முன்வரவேண்டும். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிற்கும் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.