Politics
தி.மு.க., மறு சீரமைப்பு கூட்டத்தில் மாஜிக்கள் கடும் வாக்குவாதம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், தி.மு.க., மறு சீரமைப்பு செயற்குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம் ஆகியோர் இடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டையில், தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க., ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், மறு சீரமைப்பு செயல் வீரர்கள் கூட்டம், முன்னாள் எம்.பி.,யும், மாநில விவசாய அணி செயலர் விஜயன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ., முத்துராஜா உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, பல்வேறு விதமான கருத்துகள் தொடர்பாக, நிர்வாகிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விஜயன் சமரசம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம் எழுந்து, ஆவேசமாக சென்று மேடை ஏறி, மைக்கை பறித்து, 'அறந்தாங்கி தி.மு.க., ஜெயிக்க வேண்டிய தொகுதி. அதை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? அறந்தாங்கி தொகுதியை கூட்டணி கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்குவது ஏன்?' என, ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது, மேடையில் இருப்பவர்களுக்கும், உதயம் சண்முகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரகுபதி, அதற்கு பதில் அளிக்கும் விதமாக, 'த.வெ.க.,வில் தற்போது அமைச்சராக உள்ள முகமது பர்வேஸ் வெற்றிக்கு காரணம் உங்கள் மகன் சிவசங்கர் தான். அவர், பர்வேசை தெரு தெருவாக அழைத்து சென்று பிரசாரம் செய்ததன் விளைவாகத்தான் அவர் வெற்றி பெற்றார்' என, கூறினார்.
இதனால், மேடையிலேயே இருவருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஜயன் எழுந்து, நிர்வாகிகளை கண்டித்து பேசினார். அதன்பின், அனைவரையும் சமாதானப்படுத்தி, கூட்டம் நடைபெற்றது.