Politics
டேக் ஆஃப் ஆகும் கோவை விமான நிலைய விரிவாக்கம்... தொழில் நகரத்துக்குக் கிடைக்குமா ஏற்றம்?

``தமிழ்நாட்டின் மொத்த ஜி.டி.பி-யில் 30 சதவிகிதம் அளவுக்குப் பொருளாதார பங்களிப்பைச் செய்யும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பயணிகள் வசதிக்காக இடைக்கால முனையம் அமைக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முடிவுக்கு வரும் நீண்ட கால இழுபறி!
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம், மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சராசரியாக 28 விமான சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 10 ஆயிரம் விமானப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை ஏற்ப, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடங்கின. நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் கடந்த 2024-ம் ஆண்டில் 472 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திய தமிழ்நாடு அரசு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து ரூ.2,200 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சிரமத்திற்கு உள்ளாகும் பயணிகள்!’
இதுகுறித்து கொங்கு குளோபல் போரம் என்ற தொழில் அமைப்பின் இயக்குநர் சதீஷிடம் பேசினோம். ``தமிழ்நாட்டின் மொத்த ஜி.டி.பி-யில் 30 சதவிகிதம் அளவுக்குப் பொருளாதார பங்களிப்பைச் செய்யும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் விமான நிலையம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், தொழில் நகரமான கோவை விமான நிலையத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை.
குறுகலான ஓடுதளம் காரணமாக சர்வதேச விமானங்களைத் தரையிறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க முடியவில்லை. கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்குச் சென்று விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல, போதிய வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை. கோவை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
`இடைக்கால முனையம் அவசியம்!’
இந்தச் சூழலில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கவும், அதற்குத் தடையாக உள்ள பிரச்னைகளைத் தீர்க்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு விமான நிலைய விரிவாக்கத்துக்காகத் திட்ட அறிக்கை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் வருகிற மார்ச் மாதத்தில் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். விரிவாக்கப் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுக்காலம் எடுக்கும். அதுவரை, விமான பயணிகள் வசதிக்காக இடைக்கால முனையம் அமைக்க வேண்டும். தற்போது ஒரு மணி நேரத்தில் நான்கு விமானங்கள் கையாளுப்படும் நிலையில், மேலும் இரண்டு விமானங்களைக் கூடுதலாக கையாள முடியும்.
அதேசமயம், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக துபாய், தோஹா, கொழும்பு, கோலாம்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்களை இயக்க வேண்டும். இதனால் விமானப் பயணங்கள் எளிதாகுவதுடன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்கள் வாழ்வாதாராம் உள்ளிட்டவை மேம்படும்” என்றார், விரிவாக.
‘விரைவில் விரிவாக்கம் துவங்கும்!’
விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேசிய விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப், “கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.13.2 லட்சமாக இருந்த கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டில் 34.2 லட்சமாக உயர்ந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 1.5 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ரூ.2,200 கோடி மதிப்பில் கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் விரிவாக்கப் பணிகள் தொடங்கும். 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம், தற்போது உள்ள முனையத்தைவிட நான்கு மடங்கு பெரியதாக அமைக்கப்பட உள்ளது. 2,990 மீட்டராக உள்ள ஓடுதளம் 3,819 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் அகலமான பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும். கூடுதல் விமானங்களை இயக்கவும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விமான வேகத்தில் வேகமெடுத்து பறக்குமா... கோவை விமான நிலைய விரிவாக்கம்?
