Politics
கோவைக்கு தேவை 4 ரயில்வே ஸ்டேஷன்: விமான நிலைய விரிவாக்கம் மட்டும் போதாது

கோவை: சென்னைக்கு அடுத்த 2வது பெரிய நகரமான கோவையில் பல துறைகளும் வளர்ந்து வருவதால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் ரயில்வே ஸ்டேஷன்களையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த முன்மொழிந்த திட்ட அறிக்கை ரயில்வே வாரிய அனுமதிக்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், 2வது முனையமாக போத்தனுாரை மாற்ற பணிகள் நடக்கின்றன.
வடகோவை ஸ்டேஷனில் செய்யும் பணிகள் போதுமானதாக இல்லை. கூடுதல் வசதிகள் தேவை என கூறியதால், சேலம் கோட்ட அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். தேவைகள் நிறைவேற்றப்படும் என கூறிச்சென்றதாக, கோயமுத்துார் நெக்ஸ்ட் அமைப்பின் ரயில்வே பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தெரிவித்தார்.
கோவை வடக்கு, கோவை சென்ட்ரல், கோவை கிழக்கு (இருகூர்), கோவை தெற்கு (போத்தனுார் சந்திப்பு) என, 4 ரயில்வே ஸ்டேஷன்கள் தேவை.
வடகோவையில் ரூ.25 கோடியில் பல வசதிகள் செய்யப்படுகின்றன. இங்கு 5 பிளாட்பார்ம்கள் தேவை.
போத்தனுார் சந்திப்புக்கு கோவை தெற்கு-போத்தனுார் சந்திப்பு என பெயரிட வேண்டும். நஞ்சுண்டாபுரத்தில் இருந்து அணுகுசாலை, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஸ்டேஷனின் கிழக்கே அணுகுசாலை உருவாக்க வேண்டும்.
கோவை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு, ஏற்கனவே தயாரித்த திட்ட அறிக்கைக்கு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்த வேண்டும்.
கோவை கிழக்கு-இருகூர் சந்திப்பு ஆண்டுக்கு ரூ.300 கோடி வருவாய் ஈட்டுகிறது. பயணிகளுக்காக பிளாட்பார்ம், நடை மேம்பாலம், நுழைவு, வெளியேறும் வழிகள், காத்திருப்பு அறை உட்பட பிற வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.