வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
உடுமலை: வெளிநாட்டில் முதுகலை கல்வி கற்கும் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர் தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர் 10 பேருக்கு, வெளிநாடு சென்று முதுகலை படிக்க, ஒரு மாணவருக்கு அதிகபட்சம் தலா, 36 லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. 2026–27ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
உலகளாவிய க்யூ.எஸ். தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து, நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகம், நிதி, மனிதநேயம், கலை, வேளாண் அறிவியல், சுகாதாரம், பொருளாதாரம், சமூக அறிவியல், நுண்கலைகள், சட்டம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை [https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm](https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை–600 005 என்ற முகவரிக்கு வரும் அக்.15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.