Lifestyle and human interest
திடீர் மின் வெட்டால் மக்கள் அவதி: மின்தேவை அதிகரிப்பால் நெருக்கடி
விழுப்புரம்: தமிழகத்தில் புறநகர், கிராமப்புறங்களில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்படும் திடீர் மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தாண்டு பருவநிலை மாற்ற பாதிப்பால், கோடை காலத்தை போல், செப்டம்பர் வரை 100 டிகிரி பாரன் ஹீட் அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மின் தேவையும் அதிகரித்துள்ளதால், அதனை சமாளிக்க மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையில், 1:00 மணி நேரம் முதல் 3:00 மணி நேரம் வரை மின் வெட்டு சுழற்சி முறையில் அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக, நகர்ப்புறங்களிலும், பகல் மற்றும் மாலை நேரங்களில் சுழற்சி முறையில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மின் வெட்டு தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மின் வெட்டு தொடர்வதால், பொது மக்கள் மின்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து, மின்துறை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
தமிழகத்தின் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் உச்சபட்சமாக 21,211 மெ.வா., வரை உயர்ந்துள்ளது. கடும் வெயில் தாக்கத்தால், 3,000 முதல் 5,250 மெகா வாட் வரை தினசரி பற்றாக்குறை ஏற்படுகிறது.
தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டம் தினசரி 40,000 மெகா வாட் அளவில் இருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி தான் எப்போதும் உள்ளது.
தற்போது, மத்திய, மாநில அரசின் அனைத்து தொகுப்பிலிருந்தும் 10 ஆயிரம் முதல் 12,700 ஆயிரம் மெ.வாட் அளவில் தான் மின்சாரம் கிடைக்கிறது.
காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி அவ்வப்போது கை கொடுத்து வருகிறது. அனல் மின் உற்பத்தி தான் பெரும்பான்மையாக வருகிறது. தினசரி மின் தேவை 21 ஆயிரம் மெ.வாட்டாக உள்ள நிலையில், 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் தான் உற்பத்தி கிடைக்கிறது. மீதியை காற்றாலை, சூரியன், வெளி மாநில கொள்முதல் மூலம் தான் சமாளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக நுகர்வு அதிகரிப்பால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை தவிர இதர மாவட்டங்களில், மதியம், மாலை, இரவு நேரங்களில் சுழற்சி முறையில், அறிவிக்காமல் மின் நிறுத்தம் செய்து, சமாளிக்கப்படுகிறது.
மின்சாதன பழுது காரணமில்லை, தட்டுப்பாடு தான் காரணம். இதனை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறோம். ஓரிரு நாளில் பருவ மழை கை கொடுத்தால் நிலை சீராகும். வெளியல் மின்சாரம் வாங்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.