Lifestyle and human interest
ஒரு பதவிக்கு இத்தனை பேரா?

'நம் மாநிலத்தில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே...' என ஆச்சரியப்படுகின்றனர், பீஹார் மாநில மக்கள்.
பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சட்டசபை தேர்தல், 2030ல் தான் நடக்கவுள்ளது. அதற்குள்ளாகவே, 'அடுத்த முதல்வர் யார்' என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், 'அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்; நான் தான் முதல்வர்...' என்கிறார். பா.ஜ.,வினரோ, 'எங்கள் தலைவர் சாம்ராட் சவுத்ரி தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்...' என, அடித்துக் கூறுகின்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, 'இந்த முறை பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து விட்டோம்; அடுத்து நாங்கள் தான்...' என்கின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானும், முதல்வர் பதவி மீது ஒரு கண் வைத்துள்ளார்.
சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், அவரது ஆதரவாளர் ஒருவர், 'பீஹாரின் அடுத்த முதல்வர் சிராக் பஸ்வான் தான்...' என்றார். இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத சிராக், சிரித்தபடியே அமர்ந்திருந்தார்.
பீஹார் மக்களோ, 'இருப்பது ஒரு முதல்வர் பதவி தான்... இன்னும் யார் யாரெல்லாம் அந்த பதவிக்கு குறி வைத்துள்ளனரோ...?' என, புலம்புகின்றனர்.