Politics
ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி?: தி.மு.க., - எம்.பி., கனிமொழி முயற்சி!
- நமது நிருபர் - தேசிய அளவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்க, தேசியவாத

தேசிய அளவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சந்தித்து பேசியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கருத்து வேறுபாடு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டில்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.
'இண்டி' கூட்டணியில், காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இந்த சந்திப்புகள், அதற்கு அச்சாரம் என்று கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரேவை, கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் லோக்சபா தொகுதி மறு சீரமைப்பு பிரச்னை குறித்தும் அதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் கனிமொழி விவாதித்து உள்ளார்.
மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார். சென்னையில், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்., பங்கேற்றது; தி.மு.க., புறக்கணித்தது. இதேபோல, மஹாராஷ்டிராவில், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேக்கு கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது.
நெருங்கிய தோழி இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்க, மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார்.
அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானை சந்திக்க உள்ளார். ஏற்கனவே, கடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷின் மனைவியான லோக்சபா எம்.பி., டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியையும் கனி மொழி சந்தித்து, தேசிய அளவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.