Arts, culture, entertainment and media
பாலாற்றில் ரூ.530 கோடியில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் மறந்து போச்சு! 6 ஆண்டாக அரசு கிடப்பில் போட்டதால் விவசாயிகள் விரக்தி

மாமல்லபுரம்: வடகிழக்கு பருவகால மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் பாலாற்றில் கூடுதலாக இரண்டு இடங்களில், 530 கோடி ரூபாயில் தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், நிதி ஒதுக்காமல் அரசு இழுத்தடித்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையின் பரிந்துரைகளை துாசி தட்டி, த.வெ.க., அரசு தடுப்பணைகளை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட மக்களின் குடிநீர் நீராதாரமாகவும், விவசாய பாசன நீராகவும் பாலாறு உள்ளது. இந்த பாலாற்றை ஒட்டி தொடரும் மணல் திருட்டு, மணல் குவாரிகளாலும் சீரழிந்து வந்தது.
இதனால், கடல்நீர் ஆற்றில் கலந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் உவர்ப்பாகவும் மாறி நீராதாரம் கேள்விக்குறியானது.
இந்த பாதிப்புகளை தவிர்க்க, பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்க கோரி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஏமாற்றமே மிஞ்சியது.
கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறைக்கு குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, நீர்வளத்துறை சார்பில் பாலாற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பாலாற்று நீரின் தேவை கருதி, வாயலுார் - கடலுார் படுகையில், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் அணுசக்தி துறை சார்பில், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2019ம் ஆண்டு 1 டி.எம்.சி., கொள்ளளவு நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.
மேலும், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் - ஈசூர் படுகையிலும், பொதுப்பணித்துறை சார்பில், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 டி.எம்.சி., கொள்ளளவில், மற்றொரு தடுப்பணை அதே ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்த இரு தடுப்பணைகள் வாயிலாக, எட்டு ஆண்டுகளாக வடகிழக்கு பருவகால மழைநீர், தேக்கி வைக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். குடிநீர் வளமும் பெருகியுள்ளது.
இதுதவிர, வடகிழக்கு பருவ மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம், கடலில் கலந்து வீணாகிறது. முகத்துவார பகுதி தடுப்பணையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 100 முதல் 200 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலந்து வீணானது.
மழைநீரை சேகரிக்க வசதியாக, கல்பாக்கம் அடுத்த நல்லாத்துார் பகுதியில், 56.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க, 2020ல் பொதுப்பணித்துறை திட்டமிட்டது. அடுத்தாண்டில் இத்திட்டத்தின் மதிப்பு, 85 கோடி ரூபாயாக உயர்த்தி, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த, உதயம்பாக்கம் - படாளம் படுகையில், உயர்மட்ட பாலம் மற்றும் கதவணையுடன் கூடிய தடுப்பணைக்கு, 270 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு, 2021ம் ஆண்டு அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், அரசிடம் இருந்து தடுப்பணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த தடுப்பணை அமைப்பதற்கான மதிப்பீடு 445 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே, 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும், 30 தடுப்பணைகளை, 500 மீட்டர் நீளத்திற்கு கட்ட அம்மாநில அரசு, இரு ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தது.
இதனால், தமிழகத்தின் நீர்வளம் பாதிக்கப்படும்; பாலாற்று பாசன பகுதிகள் பாலைவனமாக மாறும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே, இந்த இரு தடுப்பணைகள் அவசியமான நிலையில், தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், புறக்கணிக்கப்பட்டு, தாமதம் காரணமாக மதிப்பீடு அதிகரித்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள
த.வெ.க., அரசு, கூடுதல் தடுப்பணைகள் அமைப்பது குறித்து, சட்டசபை கூட்டத்தொடரில் எந்த அறிவிப்பும் வெ ளியிடாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசு தடுப்பணைகள் கட்டுவதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது உள்ள தடுப்பணைகளில், குறைந்த அளவே மழைநீர் தேங்குகிறது. பெரும்பாலும் கடலில்தான் கலக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நல்லாத்துார், உதயம்பாக்கம் பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்ட தடுப்பணைகள் பற்றி, அரசு அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது. அவற்றை அமைக்கவேண்டும். - சி.ஆறுமுகம், விவசாயி, ஜம்பேரி, திருக்கழுக்குன்றம்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''நல்லாத்துாரில் 85 கோடி ரூபாயிலும், உதயம்பாக்கத்தில், 445 கோடி ரூபாயிலும் தடுப்பணைகள் அமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசுதான் முடிவெடுக்க வேண்டும்,'' என்றனர்.