Politics
“மேகமலையைப்போல வால்பாறையிலும் வெளியேற்ற முயற்சி!”
சூழல் உணர்திறன் மண்டல வரைவு அறிக்கை வெளியான பிறகு மெல்ல மெல்ல வனத்துறை, கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகிறது. | Anamalai Tiger Reserve - Eco-Sensitive Zone

சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிராக கொதிக்கும் மக்கள்!
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை குடியிருப்புப் பகுதிகளை, சூழல் உணர்திறன் மண்டலத்துக்குள் கொண்டுவருவதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ என வால்பாறை பகுதி மக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்!
‘`மக்களின் வாழ்வாதாரம் முடங்கும்...’’
ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 1,479.87 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதில் 958.59 சதுர கி.மீ புலிகளின் மைய வாழ்விடமாகவும் (Core Zone), 521.28 சதுர கி.மீ தாங்கல் பகுதியாகவும் (Buffer Zone) வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புலிகள் காப்பக எல்லையிலிருந்து பத்து கி.மீ தூரம் வரையிலான 767.57 சதுர கி.மீ பரப்பளவு பகுதிகள் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவிருக்கின்றன.
இது குறித்துப் பேசுகிற வால்பாறையைச் சேர்ந்த அர்னால்ட் ரெஜி, “வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை டவுன், சோலையாறு டவுன், ரொட்டிக்கடை டவுன் ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் உள்ளன. மீதமுள்ள நிலங்கள் அனைத்தும் நீண்டகால அடிப்படையில் குத்தகைக்குத் தரப்பட்ட தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமானவை. சூழல் உணர்திறன் மண்டலத்தில் வனப்பகுதி, எஸ்டேட்டுகள், குடியிருப்புகள் எனத் தனித்தனியாகப் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மனிதச் செயல்பாடுகளையும், வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதே இந்த மண்டலத்தின் முக்கிய நோக்கம். இதன் இறுதி அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டால், புதிய கட்டுமானங்கள், குடியிருப்பு விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும்” எனக் குற்றம்சாட்டினார்.
‘`மறைமுகமாக வெளியேற்றும் முயற்சி...’’
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், “சூழல் உணர்திறன் மண்டல வரைவு அறிக்கை வெளியான பிறகு மெல்ல மெல்ல வனத்துறை, கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஆழியாறு சோதனைச் சாவடியிலிருந்து மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இரவு நேரத்தில் சென்று வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சிகள், மக்களின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. காட்டேஜுகள் செயல்பட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இறுதி அறிக்கை வெளியானால் வால்பாறை முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். சிறிய சிறிய பணிகளுக்குக்கூட வனத்துறையின் அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்படும். இதனால் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படும். தேயிலைச் செடிகளுக்கு மருந்து அடிக்க முடியாது என்பதால், விவசாயம் பாதிக்கப்படும். மக்களால் நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாது. நில மதிப்பும், முதலீடுகளும் குறையும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கும். இதை மக்களை மறைமுகமாக வெளியேற்றும் முயற்சியாகவே பார்க்கிறோம்” என்றார்.
‘`மேகமலைபோல வெளியேற்ற முயற்சி...’’
சி.ஐ.டி.யூ வால்பாறை நகர பொதுச்செயலாளர் பரமசிவம், “சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேசமயம், குடியிருப்பு மற்றும் எஸ்டேட் பகுதிகளையும் சூழல் உணர்திறன் மண்டலத்துக்குள் கொண்டுவருவதால், மேகமலை போல வால்பாறையிலும் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த அறிவிப்பு இருக்கிறது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க கேரள மாநிலத்தைப் போல குடியிருப்பு, விவசாயப் பகுதி, சுற்றுலாப் பகுதி எனத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். வால்பாறை, சோலையாறு, ரொட்டிக்கடை ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை அந்த மண்டலத்திலிருந்து விலக்க வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையிலான எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கக் கூடாது” என வலியுறுத்தினார்.
‘மேகமலையுடன் வால்பாறையை ஒப்பிடுவது தவறு’
வால்பாறை தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், “சூழல் உணர்திறன் மண்டலம் என்ற பெயரில் மக்களுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. எனவே இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.
ஆனைமலை புலிகள் காப்பக, கள இயக்குநர் வெங்கடேஷிடம் விளக்கம் கேட்டோம். “மாஸ்டர் பிளான் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. மேகமலைப் பிரச்னையுடன் வால்பாறையை ஒப்பிடுவது தவறானது. இங்கு மக்கள் யாரையும் வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை ஒழுங்குபடுத்தி, வால்பாறையைச் சூழலியலுக்கு உகந்த பகுதியாக மாற்றுவதும், மனித – வனவிலங்கு மோதல்களைக் குறைப்பதும்தான் சூழல் உணர்திறன் மண்டலத்தின் நோக்கம். இதனால் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது” என்றார்.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வனம் பாதுகாக்கப்படுமா?
