Politics
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.. தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைத்தது தமிழ்நாடு அரசு. தீபாவளி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
பண்டிகைகளை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வர உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தீபாவளியை ஒட்டி ரயில் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரிக்கான ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உட்பட 3 பேர் இடம் பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இக்குழுவினர், நெடுஞ்சாலைகள், முக்கிய பேருந்து நிலையங்களில் சோதனை நடத்தி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதுடன் தேவைப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே தீபாவளிக்கு முந்தைய நாள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நடப்பாண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் நவம்பர் 7ஆம் தேதி சொந்த ஊர் செல்வோர்கள் ரயலில் பயணிக்க ஏதுவாக டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியது.
முன்பதிவு தொடங்கிய சில விநாடிகளில் அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களான கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன.
கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், நெல்லை உள்பட முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் ஏசி மற்றும் 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், கோவை விரைவு, இன்டர்சிட்டி விரைவு, வந்தே பாரத், சேரன் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதற்கிடையே ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் ஐஆர்சிடிசி இணையதளம் சில நிமிடங்கள் முடங்கியது.
