Religion
ஏர்வாடியில் விநாயகர் ஊர்வலம் தர்கா நிர்வாகம் அளித்த வரவேற்பு
கீழக்கரை: ஏர்வாடி அருகே உள்ள வெட்டன்மனை நாடார் உறவின்முறை சங்கம் மற்றும் ஹிந்து முன்னணி இணைந்து நடத்திய 34ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது. செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. செல்வ விநாயகர் கோயில் அருகே எட்டடி உயரம் கொண்ட பெரிய விநாயகர் சிலை டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்ட மூன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏர்வாடி தர்கா அருகே அலங்கார நுழைவு வாயில் முன்பு ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை மூத்த உறுப்பினர்களால் மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
விழாக்குழு தலைவர் முருகசக்தி, கிராமத் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் வேலு, பொருளாளர் சத்தியேந்திரன், செயலாளர் பழனிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சின்ன ஏர்வாடி மன்னார் வளைகுடா கடலில் நேற்று இரவு 7:00 மணிக்கு சிலைகள் கரைக்கப்பட்டது.