வேட்டைக்காரன்குளம் ஆற்றில் பாய்ந்த அரசு பஸ்: காயம் 30

தென்காசி: தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் அழுதகண்ணி ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்ததில் டிரைவர், கண்டக்டர் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து நேற்று காலை 7:00 மணிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் சிவசக்தி பஸ்சை ஓட்டினார்; கண்டக்டர் இசக்கிமுத்து பணியில் இருந்தார்.
வேட்டைக்காரன்குளம் அருகே அழுதகண்ணி ஆற்று பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்தது.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பஸ்சுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் மீட்டனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. குற்றாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.