Economy, business and finance
வாகனங்கள் சில்லரை விற்பனை ஆகஸ்டில் 17 சதவீதம் அதிகரிப்பு : பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது

புதுடில்லி: நாட்டில் வாகனங்களின் சில்லரை விற்பனை கடந்த ஆக., மாதத்தில் 17.51 சதவீதம் அதிகரித்து, 24.23 லட்சம் வாகனங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், இந்திய வாகன விற்பனை வரலாற்றில் முதல்முறையாக, மாற்று எரிபொருளில் இயங்கும் பயணியர் வாகனங்களின் விற்பனை, பெட்ரோல் வாகனங்களை பின்னுக்கு தள்ளி, புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. மொத்த விற்பனையில் பெட்ரோல் வாகனங்களின் பங்கு 40.85 சதவீதமாக இருந்த நிலையில், மாற்று எரிபொருள் வாகனங்களின் பங்கு 41.95 சதவீதமாக பதிவாகிஉள்ளது. இந்த தரவுகளை, வாகன வினியோகஸ்தர் சங்கமான 'படா' வெளியிட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வலுவான தேவை பருவமழை மந்தநிலை மற்றும் முக்கிய பண்டிகைகள் ஏதும் இல்லாத நிலையிலும், கடந்தாண்டை விட 17.51 சதவீத வளர்ச்சியுடன் ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய விற்பனையை பதிவு செய்துள்ளது. கிராமப்புற தேவை வலுவாக இருப்பதை உணர்த்தும் விதமாக, இங்கு பயணியர் வாகன விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வளர்ச்சி 11 சதவீதமாகவே இருந்தது. பருவமழையை மட்டுமே சார்ந்திருக்காமல், மாற்று வாழ்வாதாரங்கள் மற்றும் கட்டுமான பணிகள் வாயிலாக கிராமப்புற பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வருவதை இது உணர்த்துகிறது. - சாய் கிரிதர் தலைவர், 'படா'