Crime, law and justice
ஆவடி உதவி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாத ஆவடி உதவி கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆவடியைச் சேர்ந்த மனோஜ் என்பவர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆவணங்களுடன் ஆஜராக ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
மனு, நீதிபதி என்.ரமேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனரை ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
மாலை வரை, விசாரணைக்கு ஆவடி உதவி கமிஷனர் ஆஜராகதால் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தையே இப்படி மெத்தனமாக கையாண்டால், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை எப்படி கையாள்வீர்கள் என, கண்டனம் தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஆவடி உதவி கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.